×

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.1.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட மனோராவில் குவியும் சுற்றுலா பயணிகள்

பேராவூரணி, பிப்.21: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோராவில் கடலில் படகு சவாரி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ளது மனோரா நினைவு சின்னம். 1814ல் வாட்டர்லூ கடல்போரில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் அறுகோன வடிவில் கட்டப்பட்ட கோபுரம் மனோரா. இதன் படிக்கட்டுகள் வழியாக சுமார் 75, அடி உயரமுள்ள உச்சியில் ஏறி பார்த்தால் கடல் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்திலும், பேராவூரணியிலிருந்து 12 கிமீ தூரத்திலும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சிறப்பான இந்த சுற்றுலாதலம் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது சேதமடைந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. மனோரா சுற்றுலாத் தளத்தை மேம்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெரும்முயற்சியால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது,

ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகுக்குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக் கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் என ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடலில் படகுசவாரி, சிறுவர் பூங்கா என மனோரா சுற்றுலாதளம் களைகட்டி வருகிறது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியது: தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் கண்டு இன்புறும் வகையில் கலெக்டரின் தீவிர முயற்சியால் மனோரா மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கும்பகோணம், பிப்.21: கும்பகோணம் டபீர் காவிரி படித்துறையில் நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு காகத்திற்கு படைத்து விட்டு சாப்பிடுவர். அதில் தேய்பிறை மாசி அமாவாசை என்பது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அந்த வகையில் இந்த மாத அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியை பெறலாம்.

மேலும் மாசி மாத அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வந்துள்ளதால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள டபீர் காவிரி படித்துறையில் தேய்பிறை மாசி அமாவாசை தினமான நேற்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க ஏராளமானவர்கள் புனித நீராடி, ஈர உடையுடன் குளக்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள், தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிபட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Manora ,Sethubavasthram ,
× RELATED மல்லிப்பட்டினம் துறைமுகத்தில்...