×

விவசாயி வேதனை புடலங்காய்க்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை

தா.பழூர், பிப்.21: கட்ட புடலங்காய்க்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சுத்தமல்லி, கோட்டியால், வேணாநல்லூர், காரைக்குறிச்சி, முத்துவாஞ்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி தோட்டப்பயிர்கள் செய்து வருகின்றனர். இதில் பாகல், சுரைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கை, முள்ளங்கி, கட்ட புடலங்காய், நெட்ட புடலங்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் தற்போது சாகுபடி செய்துள்ள கட்ட புடலங்காயை விதை தேர்வு செய்து அதனை விதை நேர்த்தி செய்துள்ளார்.

முளைத்த புடலங்கன்றுகளை இடைவெளியுடன் வயலில் நடவு செய்து வந்த நிலையில், தற்போது வளர்ந்து காய்க்க தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் காய்களை கும்பகோணம் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காய்க்க தொடங்கி உள்ள கட்ட புடலங்காய்களை கும்பகோணம் காய்கறி சந்தையில் 1 கிலோ 30 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் கட்ட புடலையில் நல்ல வருமானம் கிடைப்பதாக புடலங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த புடலங்காய் விவசாயி கொளஞ்சி செல்வம் கூறுகையில், கடந்து 20 வருடங்களாக புடலங்காய் சாகுபடி செய்து வருகிறேன். இந்த ஆண்டு புடலங்காய் நல்ல விளைச்சல் உள்ளது. தற்போது புடலங்காய் கொடியில் பூ பிஞ்சு காய் என உள்ள நிலையில், ஒருநாள் விட்டு ஒருநாள் காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்கிறோம். இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு மற்றும் மூன்று மூட்டைகள் காய் பறிக்கிறோம். நல்ல விளைச்சல் உள்ள நிலையில் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது இதனால் நல்ல லாபம் கிடைக்கின்றது.

இருப்பினும் புடலங்காய் படர்வதற்கு மூங்கில் மரங்கள் மூலம் பந்தல் அமைத்துள்ளோம். இந்த பந்தல் அமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இந்த பந்தல் குறைந்தது 5 வருடம் வரை தாக்கு பிடிக்கும் பின்னர் மக்கி கொட்டிவிடும். இந்த மூங்கில் மர பந்தல் காற்று மழை காலங்களில் விழுந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஆகையால் அரசு மானிய விலையில் வழங்கும் கல் மரங்களை அனைத்து காய்கறி விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். இதனால் புடலங்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரிய செலவீணம் குறையும். மேலும் காற்று மழை காலங்களில் பந்தல் சாய்ந்து கொடிகள் அறுந்து பெரிய இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

மேலும் தற்போது புடலங்காய் பிஞ்சுகளில் நோய் தாக்கம் ஏற்படுகிறது. புடலங்காய் கொடிகள் உள்ள இலைகளில் மஞ்சள் நிறத்தில் பூச்சு தாக்கம் ஏற்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளது. இந்த பூச்சு தாக்கத்திற்கு அருகில் உள்ள மருந்து கடைகளின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை வாங்கி தெளித்து வரும் நிலையில் பூச்சிகள் கட்டுப்படவில்லை. இதனால் நான்கு நாட்களுக்கு 1 முறை மருந்து தெளிக்க வேண்டி உள்ளது. ஆகையால் கூடுதல் செலவாகிறது. ஆகையால் புடலங்காய் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் நிலங்களில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புடலங்காய் பிஞ்சு மற்றும் செடியில் ஏற்படும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வழங்க வேண்டும் இது போன்று ஆய்வு செய்து வழிமுறைகளை அதிகாரிகள் வழங்கும் பட்சத்தில் தோட்ட பயிர் செய்யும் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். ஆகையால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்.

Tags : Angam Putalangai ,
× RELATED பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா