×

தமிழக மக்களின் நலனை சிந்தித்து சித்த மருத்துவத்தில் சிறப்பான நலத்திட்டங்கள்: அரசுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

கூடலூர், செப். 24: மக்கள் நலனில் அக்கறை காட்டும் விதமாக, சித்த மருத்துவ பிரிவுகளில் மக்களை ஈர்க்கும் விதமாக தமிழக சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகத்தியர் ஆசானாக பதினெண் சித்தர்களால் மரபு வழி மருத்துவத்தில் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை சித்த மருத்துவம் ஆகும். ஆண்டாண்டு காலமாய் தொடரும் இந்த சித்த மருத்துவ துறையில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவிகள், முதியோர்கள் என அனைத்து வயதினரும் பயன்படும் வகையில் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவுகளை சுகாதார நல மையங்களாக தரம் உயர்த்தி சேவைகளை மேம்படுத்தும் திட்டம். கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் சுகாதார நல மையங்கள் உருவாக்கி அங்குவரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு சித்த மருத்துவர்கள் மூலம் யோகா பயிற்சிகள் அளிக்கும் திட்டம். கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் உடற்பருமன் உள்ளவர்களைக் கண்டறிந்து சர்க்கரை நோய் முன்நிலை கண்டறிந்து தடுக்கும் திட்டம். அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவுகளில் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு நோய் இவற்றிற்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கும் திட்டம்.

திருவிழாக்காலங்களில் சித்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சேவை வழங்கும் திட்டம். தொற்றாநோய்கள் தடுப்பு திட்டங்களில் சித்த மருத்துவத்தினை இணைத்து பயன்படுத்தும் திட்டம் என மக்கள் நலனில் அக்கரை காட்டும் விதமாக சித்த மருத்துவ பிரிவுகளில் மக்களை ஈர்க்கும் விதமான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சித்த மருத்துவ பெட்டகம்
கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில், கர்பிணிகள் சுகப்பிரசவம் ஆவதற்கும், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு ஊறுவதற்கும், இரத்த சோகையை தடுக்கவும், மாதுளை மணப்பாகு, அன்னபேதி மாத்திரை, கறிவேப்பிலை பொடி போன்ற மருந்துகள் அடங்கிய சிறப்பு மருத்தவ பெட்டகம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது.  அதுபோல், வயதான முதியோர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி, நடுக்குவாதம், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு மூட்டு வலி, முதுகுத்தண்டு பிரச்சினைகளுக்கு அமுக்கரா சூரணம், குங்கிலிய மாத்திரை,   போன்ற மருந்துகள் இடம்பெற்ற மருத்துவ பெட்டகம் வழங்கப்படுகிறது.

பள்ளிக்குழந்தைகளுக்கு இரத்த சோகை எதிர்ப்பு பெட்டகம், கல்வியில் கவனக் குறைபாடு நீக்கி ஞாபக சக்தியை அதிரிக்க சித்தா மாத்திரைகள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பதற்கு நெல்லிக்காய் லேகியம், தேற்றான் கொட்டை லேகியம், கற்றாழை லேகியம் வழங்கப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்கும் திட்டத்தில், அதிமதுரம், வசம்பு உள்ளிட்ட எட்டுவகையான மூலிகையை உள்ளடக்கிய உரைமாத்திரை, ஆறு மாங்களுக்குப்பின் நெல்லிக்காய் லேகியம் வழங்கப்படுகிறது. உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவேப்பிலை பொடி, திரிபலா சூரணம், குங்கிலிய பிசின் மாத்திரை, சிலாசத்து மாத்திரை, பஞ்சாங்குலத்தைலம், குடம்புளி மாத்திரைகள் அடங்கிய சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்படுகிறது.

ஆரோக்கியம் கிட்
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ள ஸ்ட்ரோக், நரம்பு இரத்த உறைவு, கால்களில் இரத்தக்குழாய் அடைப்பு, உடல் அசதி, மூச்சு வாங்குதல், முடியுதிர்தல் சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படாதிருக்க, அமுக்கரா மாத்திரைகள், நெல்லிக்காய் லேகியம், கபசுரக்குடிநீர் அடங்கிய ஆரோக்கியம் கிட் வழங்கப்படுகிறது. கழுத்தின் மேல் உள்ள உறுப்புகளான காது, மூக்கு, தொண்டை நோய்கள், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைகள், ஒற்றைத் தலைவலி என்னும் மைக்ரேன், மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டைச் சதை வளர்ச்சி, டான்சில் பிரச்சினை போன்றவற்றை தீர்க்க திரவ மருந்துகளை மூக்கிலிடும் நசிய சிகிச்சையளிக்கப்படுகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானத்தை தடுக்கும் மருந்துகளான அமுக்கரா சூரணம், ஆறுமுக செந்தூரம், சிலாசத்து பஸ்பம், முத்துச் சிப்பி பஸ்பம் மற்றும் பிண்ட தைலம், கற்பூராதி தைலம் அடங்கிய மருந்து பெட்டகம் உள்ளிட்டவைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து, காமயகவுண்டன்பட்டி சித்த  மருத்துவ அலுவலர் சிராஜூதீன் கூறுகையில், ‘‘கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்,  கம்பம், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில்  அரசு மருத்துவமனைகளில் சித்தா பிரிவு இயங்கிவருகிறது. சித்த மருத்துவ  பிரிவுகளில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதால்  பொதுமக்கள் சித்த மருத்துவத்தையும் விரும்பி ஏற்கின்றனர்.

பேரிடர்  காலங்களிலும், கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களுக்கு சித்தமருத்துவம்  பெரிதும் பயன்பட்டது. சித்த மருத்துவத்தில் புறமருத்துவ சிகிச்சைகளாக  தொக்கண சிகிச்சை, நீராவிக் குளியல், பொது உடல்நல மேம்பாட்டிற்கான  டிரெட்மில், சைக்ளிங், மசாஜர் பயிற்சி, பள்ளிகள் மற்றும் பொது இடங்களில்  காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நிலவேம்பு கஷாயம் வழங்குதல்,  கபசுரக்குடிநீர் வழங்கல், மலைக்கிராமங்களில் சித்த மருத்துவ முகாம்கள்  நடத்துதல். பொதுமக்களிடமும், பள்ளி மாணவ,மாணவியரிடமும் பாரம்பரிய உணவுகள்  மற்றும் நவதானியங்கள் அதன் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்  உள்ளிட்டவைகள் சித்தமருத்துவத்துறையால் நடத்தப்படுகிறது. அரசின் இந்த  திட்டங்களாலும், செயல்பாட்டாலும் பொதுமக்களுக்கு சித்தமருத்துவத்தின்மேல்  மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றார். 

Tags : Government ,Tamil Nadu ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...