கோ-ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி விற்பனைக்கு ரூ.54 லட்சம் இலக்கு: கலெக்டர் துவக்கி வைத்தார்

தேனி, செப். 24:   தேனி கோ-ஆப்டெக்சில் வருகிற தீபாவளிக்கு ரூ.54 லட்சம் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து, இதன் விற்பனையை நேற்று கலெக்டர் துவக்கி வைத்தார். தேனியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் முரளீதரன் கலந்து கொண்டு தீபாவளி விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் முரளீதரன் தெரிவித்ததாவது:  தமிழக அரசு, கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்ப தள்ளுபடி விலை அளித்து விற்பனை செய்து வருகிறது.

இதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பல வண்ணங்களில் பருத்தி மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ற ரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தேனி கோஆப்டெக்சிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.44 லட்சத்து 86 லட்சத்திற்கு சிறப்பு விற்பனை நடந்தது.

இவ்வாண்டு ரூ.54 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சங்கர் , பகிர்மான மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: