×

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது குப்பை மேடான எட்டயபுரம் பொதுமயானம்

எட்டயபுரம், செப். 23: எட்டயபுரத்தில் பொது மயானம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் இறுதி சடங்கில் கலந்து கொள்வோர் பல்வேறு சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், மயானத்தை சுற்றிலும் கொட்டப்படும் குப்பை கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக இறுதிச் சடங்கு முடியும் வரை உறவினர்கள் காத்திருக்காமல் கலைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமயானத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கவும், குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எட்டயபுரம் பேரூராட்சியில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். வளர்ந்து வரும் நகரமான இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு எட்டயபுரம், நடுவிற்பட்டி, காண்சாபுரம் பகுதியில் அனைத்து சமுதாய மக்களுக்காக தனித்தனியாக மயானம் உள்ளது. நடுவிற்பட்டி, கான்சாபுரத்தில் இரண்டு மயானங்களும், கீழவாசல் பகுதியில் மூன்று மயானங்களும், எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் மூன்று மயானங்களும் உள்ளன. இது தவிர குழந்தைகள் மற்றும் ராஜகுடும்பத்தினர் அடக்கம் செய்வதற்கு தனியாக மயானம் உள்ளது.

எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள மயானம் தான் தற்போது பொது மயானமாக உள்ளது. இந்த மயானம் கோட்டை சுவர் இல்லாமல் வெட்டை வெளியில் எரியூட்டும் கொட்டகையோடு உள்ளது. மயானம் அருகே ஆரம்பத்தில் எட்டயபுரம் பகுதியில் உள்ள குப்பைகளை சிறிது சிறிதாக கொட்ட ஆரம்பித்தனர். ஆண்டுகள் செல்ல, செல்ல மயானத்தை சுற்றி குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் கொட்டத் துவங்கி கடைசியில் அதுவே குப்பை கொட்டும் இடமாக மாறிப்போனது. பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறிப்போனது.   

இதனால் மயானம் அருகிலே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மயானத்தில் ஒரு உடல் எரிந்தால் அந்த நெடியை விட குப்பைகளின் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு குப்பைகள் கொட்டப்படுகிறது. இது தவிர மயானத்தின் மேற்கூரை கடந்தகாலத்தில் போடப்பட்ட தகர கொட்டகையை மாற்றாமல் உள்ளனர். அதன் அருகில் இறுதி சடங்கு செய்வோர் கணக்கு பார்க்கும் காத்திருப்போர் அறைக்கான கல்மண்டபமும் பராமரிப்பின்றி கிடக்கிறது.
உடல் எரிந்து கொண்டிருக்கும் போது மழை பெய்தால் அந்த இடத்தில் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் உடலை எரிப்பதற்கு உடன் இருக்கும் தொழிலாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, கிராமப்புறங்களில் உள்ளது போன்று மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும். காத்திருப்போர் அறை புதிதாக கட்டவேண்டும். உடல் எரிக்கும் மேடையை புதுப்பிக்க வேண்டும். மழை நீர் தேங்காதபடி சரள்மண் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ettayapuram Public Cemetery ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை