×

மணல் குவாரிக்கு எதிர்ப்பு; கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை: தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, செப். 21: மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டி கிராம எல்லையில் வைப்பாற்றில் அரசு மணல் குவாரி கடந்த சில நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் விதிகளை மீறி  ஆற்று மணல் அள்ளப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும், மானாவாரி விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த மணல் குவாரி செயல்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தலையில் முக்காடு போட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மனு வழங்கினர். அப்போது, மணல் குவாரி முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட  குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கோட்டாட்சியர் மகாலட்சுமி தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kovilpatti ,RTO ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!