×

திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்து தீவனம் உட்கொண்ட காட்டு யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம், செப்.21:  திம்பம் மலைப்பாதையில், சாலையை மறித்து நின்றபடி வாகனங்களுக்கு வழிவிட  மறுத்த காட்டுயானை தீவனத்தை உட்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப்பாதை 1வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை நின்றபடி வாகனங்களை வழிமறித்தது. அங்கிருந்து நகர மறுத்து பிடிவாதம் பிடித்த காட்டு யானையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். திம்பம் மலைப்பாதை வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து கீழே விழுந்த கரும்பு துண்டுகளை தின்பதற்காக முகாமிட்ட காட்டு யானை, அப்பகுதியில் சிதறிக்கிடந்த கரும்புத்துண்டுகள் மற்றும் சருகுகளை உணவாக உட்கொண்டது. அப்போது கரும்பு சருகுகளை காட்டு யானை தனது கால் மற்றும் தும்பிக்கையால் கால்பந்தை உதைப்பதுபோல் உருட்டி உருட்டி விளையாடியது.

இதை பார்த்து ரசித்த வாகன ஓட்டிகள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, காட்டு யானையிடம் கணேசா வழி விடு, கணேசா வழி விடு என கூறியபடி கும்பிட்டனர். சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்து போக்கு காட்டிய காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைதொடர்ந்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில், மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Thimbam ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு