×

மருத்துவத்துறையினர் தகவல்; கொல்லம்பாளையம் சாலையில் நாளை முதல் போக்குவரத்திற்கு அனுமதி

ஈரோடு, செப்.20: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பால சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நாளை (21ம் தேதி) முதல் வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு ரயில்வே காலனி அருகே கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பால சாலை உள்ளது. இந்த சாலை ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, தாராபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சென்று வர பிரதான சாலையாக இருந்து வருகிறது.

காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து செல்லும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் அதேபோல் பூந்துறை ரோடு, கரூர் ரோட்டில் இருந்து கொல்லம்பாளையம் ரவுண்டானா வழியாக வரும் கனரக வாகனங்கள், இதே சாலையில் அனுமதிக்கப்படுகிறது. இலகு ரக வாகனங்கள், டூவீலர் போன்றவை மட்டும் கொல்லம்பாளையம் ரவுண்டானாவில் இருந்து நுழைவு பாலத்தின் மற்றொரு பாதையான ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த சாலை அதிமுக ஆட்சிக்காலத்தில் சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக சிதலமடைந்து காணப்பட்டது.

மழைக்காலங்களில் நுழைவு பாலத்தின் கீழ் பகுதி சாலையில் மழைநீர் தேங்கி, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையறிந்த தமிழக அரசு, சாலையை மேம்படுத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நுழைவு பால சாலை மேம்பாட்டு பணிக்காக கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. இதில், கொல்லம்பாளையம் நுழைவு பாலத்தின் கீழ் புற இருவழிப்பாதை சாலையை இரு பகுதியாக பிரித்து,

ஒரு பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பழுதான கான்கிரீட் சாலைகளை உடைத்து அப்புறப்படுத்தி, போதுமான சீரமைப்பு பணிகளை செய்து புதிய கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்றொரு பகுதியில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 1 மீட்டர் அளவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் போதுமான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சாலைகளுக்கும் சென்டர் மீடியனுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. நாளை (21ம் தேதி) முதல் கொல்லம்பாளையம் நுழைவு பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kollampalayam ,
× RELATED பெண்களுக்கு செயற்கை நகை தயாரிப்பு...