×

கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 

சத்தியமங்கலம்,ஜூன்7: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை பகுதியில் நேற்று மாலை பல்வேறு மலை கிராமங்களில் கனமழை பெய்தது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரை, திங்களூர், கோட்டமாளம் உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகளில் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர் – கேர்மாளம் சாலையில் அணைக்கரை வனப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் சாலையோரத்தில் இருந்த மூங்கில் மரங்கள் காற்றின் காரணமாக முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைக்கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ் செல்ல முடியாமல் நின்றதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரைப் பாலத்தின் குறுக்கே விழுந்த மூங்கில் மரங்களை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தாளவாடி மலை பகுதியில் உள்ள தாளவாடி நகர்ப்பகுதி, ராமாபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் கன மழை பெய்தது.

The post கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kadampur hills ,Sathyamangalam ,Kadampur ,Ammankarai ,Tingalur ,Kottamalam ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு