×

மாப்படுகை அரசு பள்ளி மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

மயிலாடுதுறை,செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வி. இவர் கடந்த 25ஆண்டுகளாக ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார். இவர் கடந்த 21 ஆண்டுகளாக மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாளஞ்சேரி மற்றும் கொற்கை பள்ளி என தற்போது இப்போது மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளியான இவருக்கு செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசினை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நல்லாசிரியை தாமரைச்செல்விக்கு வழங்கி கவுரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் தாமரைச்செல்விக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராம.முத்துக்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர் சிவக்குமார்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருப்பையா, டி.எல்.ஆர்.ராஜேஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் இளஞ்செழியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகந்திசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயற்கை விவசாயி ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மேகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். அப்போது 30-க்கும் மேற்பட்ட ஆசிரிய,ஆசிரியைகள் தலைமையாசிரியர் தாமரைச்செல்விக்கு சால்வை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியை,ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : Headmaster ,Mapadukai Government School with Disabilities ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!