நெல்லை, செப். 7: நெல்லை மாநகரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புரத்தில் சாலை சீரமைப்பு பணி துவங்கியது. நெல்லை மாநகர பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிப்பதற்காகவும், பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்கும் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது. அப்பகுதியில் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை. இதனால் நெல்லை சந்திப்பு புரம் முதல் ஆர்ச் வரையிலான சாலை மேடு, பள்ளமாக காட்சி அளித்ததுடன் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது.
இதையடுத்து இச்சாலையை முழுமையாக அகலப்படுத்தும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இதன் காரணமாக இச்சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. புழுதியும் பறப்பதால் இப்பகுதியை கடப்பவர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சாலையின் மையப்பகுதியில் இருந்த இரும்பு தடுப்புகள் வெல்டிங் செய்து அகற்றிவிட்டு சாலை அகலப்படுத்திய பிறகு புதிதாக சிமென்ட் தடுப்பு அமைத்து மையப்பகுதியில் கார்டன் செடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த சாலையை மறுசீரமைப்பு செய்யவும், விரிவுப்படுத்தவும் கழிவு நீரோடைகள் கட்டவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் முதல் டவுன் ஆர்ச் வரையில் ஒரு பகுதியிலுள்ள தூர்ந்து போன கழிவு நீரோடைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை உடைத்து எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 5 நாட்களாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மறு சீரமைக்கும் பணிகள் துவங்கியது. இந்த பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
