×

செழித்து வரும் மஞ்சள் செடிகள் இடப்பிரச்னையை தீர்க்க கோரி குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா

திருச்சி, செப்.6: இடப்பிரச்னையை தீர்க்க கோரி தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. திருவெறும்பூர் காட்டூர் வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தொழிலாளி கனகராஜ் என்பவர் தனது மனைவி சரஸ்வதி மற்றும் 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க நேற்று காலை வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் கனகராஜ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கனகராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது கனகராஜ் கூறியதாவது: எனது வீட்டருகே வசிக்கும் கணேசமூர்த்திக்கும், எனக்கும் இடப்பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இடத்தை அளந்து தருமாறு திருவெறும்பூர் நில அளவை துறை அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால் எனது இடத்தை அளந்து தரவில்லை. இதற்கிடையில் கணேசமூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்டு அவருக்கு இடத்தை திருவெறும்பூர் போலீசார் அளந்து கொடுத்துள்ளனர். இப்போது அந்த இடத்தில் காம்பவுன்ட் சுவரை கணேசமூர்த்தி கட்டி விட்டார். எனவே எனது இடப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அலட்சியமாக செயல்படும் நில அளவைத்துறை அதிகாரிகள் மற்றும் கணேசமூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கனகராஜிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை கலெக்டரிடம் கொடுங்கள் என்று அனுப்பி வைத்தனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் மனு அளித்தார். அதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ1,000 உதவித்தொகை வழங்குவதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Dharna ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...