×

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறிய தேர்பவனி

நாகப்பட்டினம்,செப்.6: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெரிய தேர்பவனியை முன்னிட்டு சிறிய தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் வரும் 8ம் தேதி ஆகும். அன்றைய தினம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றப்படும். செப்டம்பர் மாதம் 7ம் தேதி பெரிய தேர்பவனியும், மறுநாள் 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவிற்கு வழக்கம் போல் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய தேர்பவனி வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறிய தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிப்பட்ட சிறிய தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள். இதை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காக ராமேஸ்வரம் கடலோர காவல் படை எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் என 140 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீசாருடன் தன்னார்வலர்கள் 40 பேர் மற்றும் உயிர்காக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர் மீனவ இளைஞர்கள் குழுக்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உயிர்காக்கும் உபகரணங்களான உயிர்க்கவசம், உயிர் மிதவை, நைலான் கயிறுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ஏற்பாடாக 3 ரோந்து படகுகள், மணலில் செல்லக்கூடிய நில ஊர்தி வாகனம் போன்றவையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலில் இரவில் ஒளிரும் மின்விளக்குகளோடு எச்சரிக்கும் தடுப்பு கயிறுகளும் போடப்பட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Small Therpavani ,Velankanni Temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை