×

பரந்தூர் விமான நிலையம் குறித்த கருத்துகேட்பு கூட்டம்; பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ பாமக சார்பில் 7 பேர் குழு அன்புமணி பேட்டி

சென்னை: பரந்தூரில் விமானநிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக பாமக சார்பில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் 12 கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சி தலைவர் அன்புமணி எம்பி பங்கேற்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் பலர், எங்களுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம். ஆடு, மாடுகளை வளர்ப்பது. இங்கு எங்கள் நிலத்தையும், குடியிருப்புகளையும் அப்புறப்படுத்திவிட்டு விமான நிலையம் அமைத்தால் வாழ்வாதாரம் என்ன ஆவது. இங்குள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை மூடப்பட உள்ளன. நாங்கள் எங்கள் குடும்பம், உறவுகளுடன் இந்த ஊரில்தான் இருப்போம். எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என தெரிவித்தனர்.

பின்னர், பாமக தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்கட்ட அறிவிப்பு மட்டுமே அரசு சார்பில் வந்துள்ளது. இது எவ்வாறு அமைய உள்ளது. அதனால், ஏற்படும் பாதிப்புகள் என்ன, அரசே அமைக்கப்போகிறதா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்போகிறதா என்று பல கேள்விகள் உள்ளன.
இந்த விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய எங்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில், 7 பேர் குழு அமைக்கப்படும். அந்த குழு இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து இந்த திட்டம் எவ்வாறு அமைய உள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன செய்ய உள்ளனர் என்பது தொடர்பாக அறிக்கை அளித்த பிறகு பாமக சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஒரகடம்,  ஸ்ரீ பெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் சிப்காட்டுக்காக பல ஆயிரம் ஏக்கர் இடங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில், பலருக்கு இன்னும் இழப்பீடே வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பும் வட இந்தியர்களுக்கே கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்எம்ஏ சக்தி கமலாம்பாள், மாவட்ட செயலர் மகேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Parantur Airport ,Anbumani ,BAMA ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...