×

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் சிலைகள் வைக்க ஏற்பாடு

திருப்பூர், ஆக. 24: விநாயகர்  சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் சிலைகள்  தயாரிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. விநாயகர்  சதுர்த்தியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு அமைப்புகள் மூலம்  பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டு நீர்  நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 31-ம் தேதி விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள்  தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலூர், அரசூர், திருப்பூர் அலகுமலை ஆகிய  இடங்களில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சுற்றுச்சூழலை பாதிக்காத  வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலமாக தயாரிக்கப்பட்ட விநாயகர்  சிலையின் பாகங்கள் திருப்பூர் வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் அலகுமலைக்கு  கொண்டு வரப்பட்டு, அவை ஒட்டப்பட்டு தயார் செய்யும் பணி மும்முரமாக  நடக்கிறது. சிலைகளுக்கு ‘வாட்டர் கலர்’ பூசப்பட்டு வந்த பணி  தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற  பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப தயாராக உள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: சிலை  தயாரிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத  வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. வில் ஏந்திய விநாயகர், முருகன்,  சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கி செல்வது போல், ரத விநாயகர்,  சிம்மவாகனம் விநாயகர், யானை வாகனம், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர்  என, 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, 5 வகையில் தயாராகி வருகிறது.  கடந்த, 6 மாதமாக இப்பணி நடந்து வந்தது. திருப்பூர் மட்டுமல்லாமல், ஈரோடு,  பவானிசாகர் ஆகிய இடத்தில் தயாரிக்கப்படுகிறது.

தமிழக முழுவதும், 1.25   லட்சம் இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 6  ஆயிரம், திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது. கொரோனாவால்  2 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த  திட்டமிட்டுள்ளோம். 31-ம் தேதி முதல், 4-ம் தேதி வரை என, 5 நாட்கள்  கொண்டாட உள்ளோம். 3-ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4-ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. திருப்பூரில்  நடக்க உள்ள விசர்ஜனம் ஊர்வலம் நிகழ்ச்சியில், பாஜ மாநில தலைவர்  அண்ணாமலை, கோவையில் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vinayagar Chaturthi festival ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...