×

மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் திடீர் ஆய்வு

ஊட்டி, ஆக.24: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுத்தம், சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

இதில், அரசின் சிறப்பு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வெங்கடேஷ் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலை, சுகாதாரம், தோட்டக்கலை, மின்வாரியம், நகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் தென்மேற்கு பருவமழை சமயத்தில் சிறப்பாக இருந்தது.

வரும் செப்டம்பர் மாதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தற்போது பணியாற்றியதை போல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ெநடுஞ்சாலைத்துறை மூலம் தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடர் ஏற்படும் போது கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களின் சாவிகளை பொறுப்பான அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவசர ஊர்தி ஓட்டுநர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ள வேண்டும். மழை மற்றும் காற்றினால் சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்து தடையில்லாமல் சீர் செய்ய வேண்டும்.
மின்வாரியம் சார்பில் மரம் விழுந்து மின்தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரி செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும். தலைமை செயலர் தெரிவித்துள்ள படி தூர்வாரும் பணிகளை அடுத்த மழை தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வித்துறையின் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற அரசின் சிறப்பான திட்டங்களை நல்லமுறையில் மாணவர்களுக்கு கற்பித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட துறைகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ேதவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகளுக்கு திருப்பி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுத்தம் சுகாதாரம் மற்றும் வார்டன் விடுதிகளிலேயே உள்ளனரா என்பதை திடீர் ஆய்வு செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜன், கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ஹாரீஸ், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, இந்திராநகர் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணை குளம், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.25.75 லட்சம் மதிப்பில் கல்லக்கொரை அரசு உயர்நிலை பள்ளி பழுது பார்ப்பு பணி, ரூ.17.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கேரட் கழுவும் இயந்திர செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

Tags : Adi Dravida ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...