×

ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஆக.10: ஆறு மாதமாக குடிநீர் வராததால் சாலையோரம் செல்லும் குழாயிலிருந்து கசியும் நீரை பிடித்து வருவதால், குடிநீர் வழங்க 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி அருகே ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் புனவாசல், தெற்கு குடியிருப்பு, ஒத்தவீடு, சிறுகுடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 4 கிராமத்திலும் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இதில் புனவாசல் கிராமத்தினர் மட்டும் ஏகநாதர் கோயில் குளத்தில் கிடக்கும் தண்ணீரை குளிக்கவும், துணிகளை சலவை செய்தல், கால்நடைகளுக்கு பயன்படுத்தியும் வந்தனர். குடிப்பதற்கு கடலாடி-முதுகுளத்தூர் சாலையிலுள்ள புனவாசல் பஸ் நிறுத்தம் அருகே செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து, அதனை தள்ளுவண்டியில் குடங்களை வைத்து எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அருகிலுள்ள தெற்கு குடியிருப்பு, ஒத்தவீடு மற்றும் சிறுகுடி கிராமங்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒன்று முதல் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள புனவாசல் பஸ் நிறுத்தம் குழாய்க்கு தள்ளுவண்டியில் குடங்களுடன் தண்ணீர் பிடித்து வர சிரமமாக உள்ளதாக கிராமமக்கள் கூறுகின்றனர். சிறுகுடி கிராமமக்கள் கூறும்போது, சிறுகுடியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து புனவாசல் பஸ் நிறுத்தம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் போக, வர 4 கிலோமீட்டர் தூரம் என்பதால் தண்ணீர் பிடித்து வர சிரமமாக உள்ளது. இதனால் சிறுகுடி, தேவர்குறிச்சி சாலையிலுள்ள பாலத்தின் கீழ் கசியும் நீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகிறது.

இதனால் இரவு,பகலாக காத்து கிடக்கும் நிலை உள்ளது. கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர மாலை ஆகிவிடுவதால், பள்ளி மாணவர்கள் தள்ளுவண்டியில் தண்ணீர் குடங்களுடன் தண்ணீர் பிடித்து வர சிரமமாக உள்ளது.
மேலும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் வாந்தி, வயிற்று போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படுகிறது. எனவே ஒருவானேந்தல் காவிரி கூட்டு குடிநீர் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து புனவாசல் பஞ்சாயத்திற்கு தனியாக பைப் லைன் அமைத்து, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் பொறுத்தி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Punavasal Panchayat ,
× RELATED குடிநீர் வழங்க கோரி கடலாடி யூனியன் அலுவலகம் முற்றுகை