நிவாரண முகாம்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம், ஆக.8: தமிழக அரசு வழங்கிய வெள்ள நிவாரண பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைந்ததை சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி செய்தார். காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணத்தொகையுடன், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணம், உரிய நேரத்தில் சேர்ந்ததை உறுதி செய்யும் பொருட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நேற்று குமாரபாளையம் வந்தார்.

பின்னர், குமாரபாளையத்தில் உள்ள அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ள பயனாளிகளை சந்தித்து விசாரணை மேற்கொண்டார். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அரசு வழங்கிய பாய், போர்வை, தேங்காய் எண்ணை, குவளை ஆகியவை வழங்கப்பட்டதை பயனாளிகளிடம் உறுதி செய்தார். முன்னதாக வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்டார். ஆற்றோரம் தங்க வைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, தயார் நிலையை உறுதி செய்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன், டிஆர்ஓ மல்லிகா, நகராட்சி ஆணையாளர்கள் கோபிநாத், விஜயகுமார், பிஆர்ஓ சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: