×

ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து புல்லமடை வழியாக கொக்கூரணிக்கு பஸ் வசதி வேண்டும்: 10 கிராமமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.6:  ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அன்னை நகர், புல்ல மடை வழியாக கொக்கூரணி வழித்தடத்தில் பஸ் வசதி இல்லாததால் 10க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அன்னைநகர், சொக்கன் பச்சேரி, ராமநாதன் மடை, இரட்டையூரணி,  புல்ல மடை, வீரிபச்சேரி, ஆதித்தன் குடியிருப்பு, மணியன்பச்சேரி, புல்லமடை, வல்லமடை, மேலமடை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் என எது வாங்க வேண்டுமானாலும் ஆர்.எஸ்.மங்கலம் டவுனுக்கு தான் வரவேண்டும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்கான பஸ் வசதி கிடையாது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம் வர வேண்டும் என்றால் வல்லமடை, மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் சுமார் 5 கிமீ தூரம் சென்று பஸ் ஏறி வர வேண்டும். இல்லை என்றால் சவேரியார்பட்டிணம் பஸ் ஸ்டாப்  சென்று தான் பஸ் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் கால விரயம் மற்றும் பண விரயம் ஆகின்றது. டூவீலர், கார் உள்ளிட்டவை வைத்துள்ளவர்கள் அவர்களது வாகனங்களில் சென்று வருகின்றனர். வாகன வசதி இல்லாத பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். உடல் நிலை சரியில்லாத நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அவசர பயணத்திற்கு ஆட்டோ தான் பிடிக்க வேண்டியுள்ளது. அப்படி அவசர சூழ்நிலைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 250 ரூபாய் தேவைப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான பயனும் இல்லை. ஆகையால் தற்போதைய திமுக ஆட்சியில் எங்கள் பகுதி பொதுமக்களின் நலன் கருதி பஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RS Mangalam ,Kokurani ,Pullamadai ,
× RELATED குளிர்வித்த கோடை மழை