ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை ‘கிடுகிடு’உயர்வு; ஒரு கிலோ மல்லி ரூ. 1200,முல்லை ரூ. 700 பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: ஆடி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ. 1200க்கும், முல்லை ரூ. 700க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. திருமணம் மற்றும் விசேஷ தினங்களில் பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ. 200க்கும், முல்லை ரூ. 200க்கும், ஜாதி  மல்லி ரூ. 300க்கும், கனகாம்பரம் ரூ. 200க்கும், அரளி ரூ. 30க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 10க்கும் சாக்லெட் ரோஸ் ரூ. 30க்கும், சம்பங்கி ரூ. 30க்கும், சாமந்தி ரூ. 50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நேற்று காலை பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ. 1,200க்கும், முல்லை ரூ. 700க்கும், ஜாதி மல்லி ரூ. 600க்கும், சம்பங்கி ரூ. 400க்கும், அரளி ரூ. 500க்கும், தாழம் பூ ரூ. 250க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘ஆடி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து பூக்களும் சேதமடைந்த நிலையில் வந்துள்ளன. ஆடி மற்றும் வரலட்சுமி நோன்பு முடிந்த பிறகு படிப்படியாக பூக்களின் விலை குறையும்’’என்றார்.

Related Stories: