×

காவிரி கரையோரத்தில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

குமாரபாளையம், ஆக.5: மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், குமாரபாளையம் காவிரி கரையோரத்தில் உள்ள 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்கு வசித்த 300 பேர், அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குமாரபாளையத்தில் பெய்த கனமழையால், நகராட்சி பகுதியில் உள்ள இந்திராநகர், மணிமேகலை தெரு, அண்ணாநகர், கலைமகள் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணிமேகலை தெருவில் 37 வீடுகளையும், கலைமகள் வீதியில் 35 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் சுமார் 15 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து இங்கு வசித்து வந்த 300 பேர், அரசு நிவாரண முகாமான ராஜேஸ்வரி திருமண மண்டபம், நடராஜா திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மேட்டுகாடு, சுண்ணாம்பு சூளை குடியிருப்புபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வருவாய் துறையினரும் நகராட்சி அதிகாரிகளும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.நேற்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார். முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகளை வழங்கும்படி அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளிபாளையம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வியுடன் பார்வையிட்டார். செங்குந்தர் காளியம்மன் கோயில், குமரன்நகர், ஆதிதிராவிடர் நலவிடுதி, நாட்டாக்கவுண்டம்புதூர் அரசு பள்ளி ஆகிய 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 52 குடும்பங்களை சேர்ந்த 164 பேரை சந்தித்து அரசு வழங்கும் உதவிகளை கேட்டறிந்தார். ராசிபுரம்: ராசிபுரத்தில் மதியம் லேசான தூறலுடன் துவங்கிய மழை, திடீரென சுமார் 1 மணிநேரம் கனமழை பெய்தது. மழையால் ஆலாம்பட்டியில் ரமேஷ் என்பரவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ராசிபுரம், வெண்ணந்தூர், பட்டணம், வடுகம், நாமகிரிபேட்டை, சீராபள்ளி, காக்காவேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், கனமழை பெய்தது.
காவிரியாற்றில் பவானிக்கும், குமாரபாளையத்திற்கும் இடையே பாலம் கட்டப்பட்டது.

Tags : Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி