×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு ேகாலாகலம்

தஞ்சாவூர், ஆக.4: தஞ்சாவூர் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் புதிதாக திருமணமானவர்கள் ஆற்றங்கரையில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உள்ள கல்லணை கால்வாய் புது ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல, தஞ்சாவூர் அருகிலுள்ள அம்மன்பேட்டை கிராம மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மேள தாளம் இசை முழங்க உற்சாகத்துடன் கொண்டாடினர். தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன் பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்குள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்டு, அங்கிருந்து மேள, தாளம் முழங்க ஊர்வலமாக சென்று அருகில் உள்ள வெட்டாறில் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடினார். மேலும் திருவையாறு, வடவாறு மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் வழிபாடு செய்தனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாடாத நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஆடிபெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பட்டுக்கோட்டை: தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவும் ஒன்று. புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிவித்த மாலைகளை காவிரியில் விட்டு, தாலிக்கயிறுகளை மாற்றிக் கொள்வது, திருமணம் ஆகாத பெண்கள் காவிரித் தாயை வணங்கி விரைவில் திருமணம் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வது, சுமங்கலி பெண்கள் தாலி நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு ஒருவரையொருவர் மாற்றி மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள். காவிரிப் படித்துறையில் பழங்கள், மஞ்சள் அரிசி வைத்து படையலிட்டு ஆற்றுத் தண்ணீரில் விட்டு காவிரித் தாயை வணங்குவதை தமிழர்கள் தொன்று தொட்டு வழக்கமாக செய்து வருகின்றனர். வீடுகளில் அசைவ உணவு சமைக்கப்பட்டு படையலிட்டு அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகள் கொரோனோ காலம் என்பதால் களை இழந்திருந்த இந்த ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு களைகட்டியது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட புதுமண தம்பதிகள், பெண்கள் அவர்கள் சொந்த பந்தங்களுடன் குவிந்தனர். இதனால் பட்டுக்கோட்டை நாடியம்மன்கோயில் குளத்திலும், காசாங்குளத்திலும் அதிக அளவில் பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாடினர். இது குறித்து புதுமணத் தம்பதியினர், புதுப்பெண் பட்டுக்கோட்டை ராஜேஸ்வரி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்திருந்தது. இந்த ஆண்டு எங்களது சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் ஆசீர்வாதத்துடன் ஒரு திருவிழாபோல் இந்த ஆடிப்பெருக்கு விழாவை நாங்கள் கொண்டாடி உள்ளோம். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

Tags : Thanjavur District ,Adiperku Ekalakalam ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...