×

முத்துப்பேட்டை அருகே புரசாங்கன்னி குளத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்

முத்துப்பேட்டை,ஆக. 2: முத்துப்பேட்டை அருகே புரசாங்கன்னி குளத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேருராட்சிக்கு உட்பட 15, 11-வது வார்டின் பகுதியை இணைக்கும் பேட்டை சாலையிலிருந்து குட்டியார் பள்ளி முதல் துவங்கும் சிமெண்ட் சாலை ஜமாலியா தெரு, கோவிலான் தோப்பு, காமராஜர் காலனி, பந்தலடி திடல், ஊமை கொல்லை ஆகியவை கடந்து செம்படவன்காடு பெருமாள் கோவில் அருகே முடிகிறது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் அரசு பள்ளி கூடங்கள், வழிப்பாடு தளங்களும் உள்ளன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சிமெண்ட் சாலை சுமார் 8 வருடங்களுக்கு முன்பு இருந்த தார் சாலைக்கு பதிலாக போடப்பட்டது. சாலை பணிகள் நடைபெறும் போதே முறையான பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்யாததால் அடுத்த சில நாட்களிலேயே சாலை சேதமாக தொடங்கிவிட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் பெய்த மழைக்கு சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குளியுமாக மாறிவிட்டது. அதேபோல் இப்பகுதியில் குளங்களை கடக்கும் சாலையில் தடுப்பு சுவர்கள் சாய்ந்து சாலை ஆபத்தான நிலையில் சேதமாகி உடைந்து உள்ளது. புரசாங்கன்னி குளத்தின் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் ஏற்கனவே சேதமாகி இருந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழைக்கு பெயர்ந்து முழுவதும் விழுந்ததுடன் அப்பகுதி சிமெண்ட் சாலையும் சேதமாகி விட்டன. இதன் மூலம் சிறுசிறு விபத்துக்கள் முதல் பெரியளவிலான விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இனியும் காலதாமதம் படுத்தாமல் இடிந்து விழுந்த குளத்தின் தடுப்பு சுவரை கட்டித்தரவும் சேதமாகியுள்ள இந்த சாலையை சீரமைத்து சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Purasanganni pond ,Muthupet ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்