×

பேரூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் ஆடி அமாவாசை தர்ப்பண வழிபாடு

தொண்டாமுத்தூர், ஜூலை 29: பேரூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பண வழிபாடு நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆடி அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கும்  பட்சத்தில் பித்ரு தோஷம் பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் எடுத்த காரியம்  வெற்றி பெறும்,  மகிழ்ச்சி பெருகி பொருட்கள் சேரும் என்பது ஐதீகம். இந்த நிலையில் கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வர துவங்கினர்.நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் பக்தர்கள் ஆற்றில் குளித்தும், தண்ணீரை தலையில் தெளித்தும் சூரிய நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபத்தில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் கொடுத்து வழிபட்டனர். பின்னர் காகம், பசுக்களுக்கு அகத்திக் கீரை கொடுத்தனர். ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர்.

மதியம் வீடுகளில் தலை வாழை இலையில், இறந்த முன்னோர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவுகளை படையலிட்டு குடும்பத்துடன் அமர்ந்து அன்னதானம் வழங்கி முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதிகாலை முதல் மேற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வந்த வாகனங்கள் செல்வபுரம், சிவாலயா தியேட்டர், புட்டுவிக்கி பாலம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுக கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம் வழியாக செல்லுமாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Tags : Aadi Amavasi Darpana Puja ,Perur Noyal river ,
× RELATED பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம்