×

ரயில்வே தனியார்மயம் எஸ்ஆர்எம்யூ கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 28: ஒன்றிய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் சார்பில் மதுரை ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்ட தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர் ரபீக் பங்கேற்று பேசுகையில், ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறி ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பாமல் சரண்டர் செய்வது தொழிலாளர்களுக்கும், ஓட்டு போட்ட மக்களுக்கும் செய்யும் துரோகம். தெற்கு ரயில்வேயில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேல் காலி இடங்கள் உள்ளன.

அதனை உடனே நிரப்ப வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். ஆட்குறைப்பு செய்வது நியாயமா? போராடி பெற்றெடுத்த உரிமைகளான சிஎல்எல்ஏபி வழங்க வேண்டிய சூழலில் அதனை தர மறுத்து வேலை வாங்கும் நிர்வாகத்தை கண்டிக்கின்றோம். எட்டு மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஓவர் டைம் அலவன்ஸ் தர வேண்டும். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். ரயில்வே மற்றும் பொதுத்துறை சொத்துக்களை விற்க கூடாது என்றார்.உதவி கோட்ட செயலாளர்கள் சபரிவாசன், செந்தில், ஜூலியன், கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், முருகேசன், அருண், திலக் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags : SRMU ,
× RELATED திருச்சியில் SRMU தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக உண்ணாவிரதம்..!!