×

சைபர் திருடர்களிடம் உஷார் ஆன்லைன் மோசடி திட்டத்தில் பணத்தை இழக்க வேண்டாம் புதுச்சேரி ஐஜி சந்திரன் எச்சரிக்கை

புதுச்சேரி, மே 25: புதுச்சேரியில் முதலீடு செய்யும் பணத்துக்கு மூன்று மடங்காக பணத்தை தருகிறோம் என மக்களின் ஆசையை தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆன்லைன் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு புதுச்சேரி ஐஜி சந்திரன் அறிவுறுத்தி உள்ளார். புதுச்சேரியில் நாளுக்குநாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சோலார், மோர்கன், காரிடர் என்ற கம்பெனிகளில் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் தரும் கவர்ச்சி திட்டங்கள் பலவற்றை அறிவித்து வருகிறார்கள்.  இதனை நம்பி பலரும் பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதில் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து ஏமாறும் அப்பாவி பொதுமக்களின் சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்து வருகின்றனர். இது குறித்து புதுச்சேரி ஐஜி சந்திரனிடம் கூறுகையில்,  சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி புதுப்புது கவர்ச்சி திட்டங்களை அறிவித்து திருடும் சம்பங்கள் தற்போது நடந்து வருகிறது. இத்தகைய மோசடியான சைபர் திருடர்களிடம் சிக்கிக்கொண்டு மக்கள் பணத்தை இழக்க வேண்டாம்.

தற்போது மல்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி ஒருவகையான மோசடி நடந்து வருகிறது.   இதில் அதிகளவு ஆட்களை சேர்த்துவிடுவதால் கமிஷன் கிடைக்கும். தங்கள் கம்பெனியில் உள்ள பொருட்களில் முதலீடு செய்யுங்கள், இதற்கான தொகை குறிப்பிட்ட நாட்களில் மூன்று மடங்காக கிடைக்கும் என கூறுகின்றனர்.  இதனை நம்பி தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் இந்த சைபர் மோசடியில் தங்களுக்கு தெரியாமலே சேர்த்து விடுகின்றனர். இது மிகவும் மோசமானது. தெரிந்தவர்களிடம் பணம் கொடுத்தாலே திரும்பி வராது என்ற இன்றைய சூழலில், பாதுகாப்பற்ற முறையில் தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை கொடுத்து, பலர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.தற்போது புதுச்சேரியில் காரிடர், சோலார், மோர்கன் என்ற பெயரில் ஆன்லைனில் பொதுமக்கள் பலர் முதலீடு செய்வதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.  முதலில் சிறியதாக முதலீடு செய்ய சொல்லி ஆசையை தூண்டுவிட்டு, பின்னர் அது பேரசையாக்கி அதிக பணத்தை முதலீடு செய்ய வைத்து இறுதியாக பணம் கிடைக்காமல் போய்விடும்.  கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் போய்விடும். உங்கள் பணம் மட்டுமல்ல நண்பர்களும் உங்களை நம்பி பணத்தை இழக்க நேரிடும். தெரிந்த ஆட்களிடம் பணம் கொடுக்க யோசிப்பவர்கள், யாரென்றே தெரியாத ஒருவரை நம்பி பணம் முதலீடு செய்வதற்கு முழு காரணமும் பேரசைதான். இத்தகைய குற்றங்களுக்கு சைபர் கிரைமில் புகாரளித்தாலும் அவர்களை பிடிக்க முடியாது. அவர்கள் ஆப்ரிக்காவிலோ, அல்லது சீனாவிலோ, அமெரிக்காவிலே இருப்பார்கள், கைது செய்து இழந்த  பணத்தை மீட்பதென்பது மிக, மிக கடினமானது. அந்தளவுக்கு இன்றைக்கு  இணைய தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டது. காவல்துறையை பொறுத்தவரை முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிகை செய்கிறோம் விழிப்புடன் இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Puducherry ,IG ,Chandran ,Ushar ,
× RELATED புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல்...