×

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டும் மழையிலும் கொளுந்து விட்டு எரிந்த தீ

நாகர்கோவில், மே 19: நாகர்கோவில் வலம்புரிவிளையில் நேற்று 2 வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. நாகர்கோவில் வலம்புரிவிளையில் மாநகராட்சிக்கு ெசாந்தமான குப்பை கிடங்கு உள்ளது.  தற்போது இங்கு மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வப்போது குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த மாதமும் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 5 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் மீண்டும் குப்பை கிடங்கில் தீ பிடித்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் உதவி கோட்ட அலுவலர் இமானுவேல் தலைமையில் நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு படையினர் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனால் ஒரு இடத்தில் தீயை அணைத்த போது மற்றொரு இடத்தில் தீ பிடித்தது. இதனால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

நேற்று 2 வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. நாகர்கோவில் மட்டுமின்றி கன்னியாகுமரியில் இருந்தும் தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலையில் இருந்து  தொடர்ந்து மழை பெய்தது. இருப்பினும் தீ அணைய வில்லை. தொடர்ந்து புகை வந்து ெகாண்டு இருந்ததுடன், தீயும் எரிந்த வண்ணம் இருந்தது.  ஜேசிபி மூலம் குப்பைகளை கிளறி அடிப்பகுதி வரை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பணியில் பெரும் சிரமத்துக்கு இடையே தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்தனர். மழை தொடர்ந்து சாரலாகவே இருந்ததால் தீ அணைய வில்லை. பலத்த மழை,சுமார் 1 மணி நேரம் பெய்திருந்தால் தீ அணைந்திருக்கும் என்றும் தீயணைப்பு வீரர்கள் கூறினர். குப்பை கிடங்கில் கெமிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை கிடப்பதால் தான் தீ எளிதில் அணைவதில்லை என கூறப்படுகிறது. குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது கூடுதலாக இரு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளை வேகமாக முடித்து, குப்பைகளை முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valampurivilai Garbage Depot ,
× RELATED வலம்புரிவிளை குப்பை கிடங்கில்...