×

கடலூர் மகளிர் கல்லூரியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

கடலூர், மே 18: கடலூர் மகளிர் கல்லூரியில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அருகே உள்ள செம்மண்டலத்தில், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நேற்று காலை, அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவர், கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அவர், கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர், கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கடலூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி விழுப்புரம் மாவட்டம் சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த, நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19) என்பதும், இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்ததும் தெரியவந்தது.

தனலட்சுமியை சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை மாலை அவரது தந்தை, நாகலிங்கம் கல்லூரியின் விடுதியில் கொண்டு வந்து விட்டுள்ளார். மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ, என்ற பயத்தில், தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த, தனலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு விரைந்து வந்து, முதல்வரின் அறைக்கு சென்று, அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடுமுறை முடிந்து, விடுதிக்கு வரும் போது, தங்களது மகள் நன்றாக இருந்ததாகவும், திடீரென தற்கொலை செய்து கொண்டது நம்ப முடியவில்லை என்றும், எனவே இதில் சந்தேகம் உள்ளது என்றும் கூறினர். இதையடுத்து அங்கு இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore Women ,College ,
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...