×

போலி ஆவணம் மூலம் நிலத்தை பதிவு செய்ததாக கூறி பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகம் முற்றுகை

பேரையூர், மே 10: டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (49). மாற்றுத்திறனாளி. இவரது தந்தை வேலு பெயரிலுள்ள 2 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் கடந்த மே 6ம் தேதி பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றொரு நபருக்கு பத்திரம் பதிவு செய்வதாக முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முருகன், பத்திரப்பதிவு அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அப்போது பத்திரப்பதிவு அலுவலர் மனுவை வாங்காமல் படித்து மட்டும் விட்டு, நாளை உங்களது ஆவணங்களை கொண்டு வாருங்கள், அதுவரை உங்கள் பத்திரப்பதிவை நிறுத்தி வைப்பதாக கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்றே மற்றொரு நபருக்கு முருகனின் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக தெரிகிறது. மறுநாள் ஆவணங்களுடன் வந்த முருகன், பத்திரப்பதிவு அலுவலகம் விடுமுறை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\

இதனால் கடந்த மே 7ம் தேதி பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முருகன் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலியாக பத்திரம் பதிவு செய்த அதிகாரியை கண்டித்தும், போலியாக பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய கோரியும் கோஷமிட்டனர்.

தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலராக ெபாறுப்பில் இருக்கும் சுப்பையாவிடம் மனு கொடுத்த பின், இதுதொடர்பாக பேரையூர் போலீசிலும் மனு அளித்தனர். முருகன் நிலத்தை போலியாக பத்திரம் பதிவு செய்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மதுரை மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் எனக்கூறி விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Peraiyur Deeds Office ,
× RELATED செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்