×

சுகாதாரமான குடிநீர் கோரி சாந்திநகரில் பொதுமக்கள் திடீர் மறியல்

நெல்லை, மே 10: பாளை.  சாந்திநகரில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி  மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. நெல்லை  மாநகராட்சி, பாளை. சாந்திநகர் 6 மற்றும் 7வது வார்டுகளில் உள்ள  சுமார் 15 தெருக்களில் கடந்த 2 ஆண்டாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறதாம். சில நேரங்களில் குடிநீருடன் அசுத்தம்  கலந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்று  காலை   பாளை. சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியில் திரண்டு வந்ததுடன் திடீரென சாலை மறியலில்  ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அசுத்தமான நிலையில் விநியோகம் செய்யப்பட்ட  குடிநீரை 2 குடங்களில் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார்  சமரசப்படுத்தினர். இதில் பாளை. பகுதியில் சுகாதாரமான முறையில்  குடிநீர் வழங்க திட்டம் தயாரித்து  மாநகராட்சி கூட்டத்தில் ரூ.6 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 3 நாளில் நடவடிக்கை  எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தொலைபேசி மூலம் போலீசாரிடம் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து  கலைந்துச்சென்றனர். இருப்பினும் இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Tags : Chandigarh ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்