×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மேற்கு ராஜகோபுரத்தினை ஆய்வு செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்


சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மேற்கு ராஜகோபுரத்தினை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோவி.செழியன் மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மேற்கு ராஜகோபுரம் மிகவும் சிதிலமடைந்ததை தொடர்ந்து 2006ம் ஆண்டு கல்காரம் நீக்கி மேலே உள்ள பகுதி மட்டும் உபயதாரர் மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் முழுவதுமாக திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வதற்கு, ஏதுவாக காஞ்சிபுரம் மண்டல திருப்பணி வல்லுநர் குழுவில் கடந்த ஆண்டு நவ.8ம் தேதி பரிசீலனைக்கு வைக்கப்பட்டது.

வல்லுநர்களால் மேற்கு ராஜ கோபுரத்தின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு கருத்துரு வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்காணும் தீர்மானத்தின்படி விரைவில் மண்டலக்குழு 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த மேற்கு ராஜகோபுரத்தினை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது மேற்கு ராஜகோபுரம் பக்தர்கள் பயன்பாட்டில் இல்லை.  பக்தர்கள் தெற்கு ராஜகோபுரம் வாசல் வழியாக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பதற்றம் ஏதும் ஏற்பட வழிவகை இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Kanchipuram Ekambaranathar Temple West Rajagopuram ,Minister ,Sekarbapu ,
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...