×

பட்டா வாங்கி தருவதாக பணம் வசூல் பழநி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் புகார்

பழநி, ஏப். 20: பழநி  அருகே பெரியம்மாபட்டி பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று  வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்தனர். அதில்,  ‘பழநி அருகே பெரியம்மாபட்டி கிராமத்தில் நரேந்திரன் என்கிற  ஜமீன்தாரிடமிருந்து  அரசு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1970ம் ஆண்டு  சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. அன்று முதல்  எங்கள் ஊராட்சியை சேர்ந்தவர்களும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும்  அந்நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களுக்கு மிக குறைந்த  அளவிலேயே விவசாயிகளுக்கு அரசு நிலப்பட்டா வழங்கி உள்ளது. மீதமுள்ள  இடங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

     இந்நிலையில் சிலர் விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் பட்டா வாங்கிதருவதாகக்  கூறி விவசாயிகளிடமிருந்து ரூ.1000ல் இருந்து ரூ. 3 ஆயிரம் வரை வசூல்  செய்து வருகின்றனர். மேலும், தனிநபர் நிலங்களில் சிலர் அத்துமீறி நுழைந்து   எங்கள் முன்னோர்கள் விவசாயம் செய்த நிலம் என்று கூறி மிரட்டி வருகின்றனர்.  இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு தகராறுகள் ஏற்படும் நிலை உருவாகி  உள்ளது. மேலும் உபரி நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அரசு  அதிகாரிகள் பட்டா வழங்க எடுத்து வரும் நடவடிக்கைகள் தடைபடுகிறது.
எனவே, பணம் வசூலித்து ஏமாற்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Tags : Palani Kottatsiyar ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு