×

பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால் மா விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரியகுளம், ஏப். 19: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் முருகமலை, செலம்பு, வரட்டாறு, கும்பக்கரை, கொண்ட கத்தி, கரும்பாறை, குருத்தடி, மணக்காடு, சோத்துப்பாறை, உப்புக்காடு, சின்னயம்பாளையம் ஆகிய ஊர்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் நீலம், மல்கோவா, பெங்களூரா, சப்பட்டை, பங்கனப்பள்ளி, காலே பாடி, காதர் உள்ளிட்ட மா ரகங்கள் விளைகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மாங்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தினசரி 200 லாரி லோடுகள் வரை மாங்காய்கள் அனுப்பப்படும். இதனை நம்பி விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் வியாபாரிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் மா விவசாயம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் பூப்பூக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், பூ பூக்க வில்லை. மார்ச் மாதத்தில் பூ பூத்து பிஞ்சு வரவேண்டிய நேரத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த மழையால், மாம்பிஞ்சுகள் கருகி உதிர்ந்ததுடன், மற்ற பிஞ்சுகளும் கருப்பு அடைந்து கீழே உதிர்ந்து விழுந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மா விவசாயத்தை நம்பி இருந்த வியாபாரிகள், தொழிலாளிகள், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
 எனவே, தமிழக அரசு மா விவசாயத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி