சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஊட்டி-மைசூர் சாலையில் இரவு நேர போக்குவரத்தை அனுமதிக்க கோரிக்கை

ஊட்டி, ஏப்.19:  சுற்றுலா பயணிகள் நலன் கருதி கோடை சீசன் முடியும் வரை ஊட்டி - மைசூர் சாலையில் இரவு நேர போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் மைசூர்,குண்டல்பேட், முதுமலை வழியாக ஊட்டிக்கு வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், நாள்தோறும் ஊட்டிக்கு வந்துச் செல்வதன் மூலம் சுற்றுலா தொழில் மேம்பாடு அடைவது மட்டுமின்றி,பொருளாதார ரீதியாகவும் நீலகிரி மாவட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி - மைசூர் சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கர்நாடகாவில் இருந்து ஊட்டி வருகின்றனர். அதேபோல், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பெங்களூர், மைசூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இவ்வழித்தடத்தில் இரவு நேர போக்குவரத்திற்கு தடையுள்ளது தெரிவதில்லை. இதனால், மாநில எல்லையில் சிக்கிக் கொள்கின்றனர். மறுநாள் காலை வரை எல்லையில் சாலையோரங்களில் வாகனங்களிலேயே படுத்து தூங்கி விடிந்த பின்னர் இவ்வழித்தடத்தில் ஊட்டிக்கு வருகின்றனர்.

இது போன்று மாநில எல்லைகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் தூங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களை விட்டு இறங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி கோடை சீசன் முடியும் வரை இவ்வழித்தடத்தில் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: