×

பிணந்தின்னி கழுகுகள் கூட்டம் முதுமலையை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

ஊட்டி,ஏப்.19:  இயற்கை துப்புரவாளர் என்றழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் 1995ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் கணிசமான அளவிற்கு இருந்தது. அதன்பின்னர் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் டைக்ளோ பினாக் என்ற மருந்து காரணமாக அவை வேகமாக அழிய துவங்கின. இதனால் பிணந்தின்னி கழுகுகள் அழியும் பட்டியலில் உள்ள பறவையினமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் காணப்படும் பிணந்தின்னி கழுகுகளில் வெண்முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் ஆகிய இந்த 4 வகையான கழுகுகள் தென்னிந்தியக் காடுகளை வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பள்ளத்தாக்கு, சீகூர், மசினகுடி மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது. இவற்றை பாதுகாக்க வனத்துறை மற்றும் தனியார் ெதாண்டு நிறுவனங்களும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் சமீபகாலமாக பிணந்தின்னி கழுகுகளை கூட்டமாக தென்படுகின்றன. இது ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில், முதுமலையில் சமீபத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வெண்முதுகு பிணந்தின்னி கழுகுகள் 110ம், கருங்கழுத்து 11ம், செந்தலை 5ம், மஞ்சள் முகம் 2ம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். 2021-22 இனப்பெருக்க காலத்தில் 14 வெண்முதுகு குஞ்சுகளும், 4 கருங்கழுத்து குஞ்சுகளும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது. ஏப்ரல் மாத துவக்கத்தில் இனப்பெருக்கக் காலம் முடிந்துவிட்டதால், குஞ்சுகள் சிறகடிக்க ஆரம்பித்துள்ளன. முதுமலையில் போதுமான இறையும் தற்போது கிடைத்து வருவதால் 40 முதல் 50 என கூட்டமாக இவற்றைப் பார்க்க முடிகிறது.

இவற்றின் கூடுகள் இருக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் 100 கி.மீ பரப்பளவை பிணந்தின்னி பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அழிவிலிருந்தும் பாதுகாக்க முடியும், என்றார் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், புலிகள் காப்பகமாக இருப்பதால் கழுகுகளுக்கும் பாதுகாப்பான பகுதியாகவே இருக்கிறது. கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Tags : Mudumalai ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...