×

திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் தளி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

உடுமலை,  ஏப். 14: தளி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.  அதன் தலைவர்  உதயக்குமார் தலைமையில், உதவித்தலைவர் செல்வன், செயல் அலுவலர் சாந்தி  முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தீர்மானங்களை அங்குராஜ்  வாசித்தார். இதில் வார்டு எண் 16 குருமலை செட்டில்மெண்ட் பகுதிக்கு  அப்பகுதி மக்கள் சென்றுவர புதிய சாலை அமைக்க  நில அளவை செய்தல், வார்டு எண்  17 திருமூர்த்திமலை பஸ் நிறுத்தம் அருகில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம்  மதிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் நிழற்குடை  அமைத்தல்.

வார்டு எண் 15 தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு புதிய குடிநீர்  இணைப்பு வழங்குதல்,  திருமூர்த்தி அணை படகுதுறையை நவீனப்படுத்தி,  பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும்வகையில் படகு சவாரி துவங்க  நடவடிக்கை எடுத்தல், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சொத்து வரி, காலிமனை வரி  உயர்வு செய்தல், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய  குடிநீர் உபகரணங்கள் மற்றும் பொதுசுகாதாரப் பொருட்கள் வாங்குவதற்கு  ஒப்புதல் வழங்கல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக  கூட்டத்தில் பேசிய மன்ற தலைவர் உதயகுமார், பேரூராட்சியில் உள்ள 3  பாலங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய  முதல்வர் ஸ்டாலின் பெயர்களை வைக்கவும், பேரூராட்சியில் உள்ள முக்கிய  வீதிகளுக்கு உள்ளூர் முக்கிய பிரமுகர்களின் பெயரை வைப்பதற்கும் சிறப்பு  தீர்மானங்களை கொண்டு வந்தார். இதனை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து  உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றினர்.

கூட்டத்தில், வார்டு  உறுப்பினர்கள் சுகுணாதேவி, புவனேஸ்வரி, சுஜாதா,  திருமூர்த்தி, சரவணன்,  வசந்தா, சின்னப்பன், பொன்மணி, மாணிக்கம், வாணீஸ்வரி, தேவி, கிருஷ்ணவேணி,  ராமலிங்கம், முத்துச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : Tali Municipal ,Council ,Thirumurthy Dam ,
× RELATED திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா...