×

மறைமலைநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் பட்ஜெட்டை விளக்கியும், மக்களுக்கு நன்றி தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்

செங்கல்பட்டு: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், மறைமலைநகரில், நேற்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து வெற்றிப்பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம் மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு திடலில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, துணை செயலாளர்கள் விஸ்வநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜர், மாவட்ட பொருளாளர்கள் சேகர், இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைமலைநகர் நகர செயலாளரும் நகராட்சி தலைவருமான ஜெ.சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து திமுகவை வெற்றிப்பெற வைத்ததற்காகவும் மக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில், அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக, மதிமுக மற்றும் பாஜ உள்பட மாற்றுக்கட்சிகளை  சேர்ந்த 20 ஆயிரம் பேரும் 70 ஊராட்சி மன்ற தலைவர்களும்  தங்களை திமுகவில்  இணைத்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திமுக பொருளாளர் டிஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்பி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைதிலிங்கம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.கந்தர் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, செங்கல்பட்டு நகர செயலாளர் எஸ்.நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் டிகே.கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயாகருணாகரன், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் கே.பி.ராஜன், இளைஞரணி நிர்வாகி பரணி, நகரமன்ற கவுன்சிலர்கள் மனோகரன், கிரி சந்திரன், ஆல்பர்ட், சுரேஷ்குமார், பெருமாள், காயத்ரி சரவணன், நித்தியானந்தம், வினோத்குமார், குணசேகரன், கோகுல், செங்கல்பட்டு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், நகர மன்ற கவுன்சிலர் ரேகா மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Maraimalai Nagar ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...