×

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பரமக்குடியில் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பரமக்குடி, ஏப். 9: பரமக்குடி, எமனேஸ்வரம், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெசவு தொழில் நலிவடைந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக அசல் பட்டு நூல் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசல் பட்டு மற்றும் ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரியை முழுவதும் நீக்க வேண்டும், அசல் பட்டை இறக்குமதி செய்ய வேண்டும், 60 வயது அடைந்த அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.3000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பட்டு சிறு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கேசவராமன் தலைமை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தினை சௌராஷ்டிரா சபை தலைவர்கள் மாதவன் (பரமக்குடி), சேஷய்யன் (எமனேஸ்வரம்) தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு அசல் பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் விரைவில் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பெருமாள் நிறைவு செய்தார்.


Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு