×

குஜிலியம்பாறையில் திறந்தவெளி ‘பார்’ ஆன பஸ்நிலையம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குஜிலியம்பாறை, ஏப். 9: குஜிலியம்பாறையில் பஸ்நிலையம் ‘குடிமகன்களின்’ திறந்தவெளி ‘பார்’ ஆக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையியில் பாளையம் பேரூராட்சியில் குஜிலியம்பாறை அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் 11 அரசு பஸ்கள், 14 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குஜிலியம்பாறையில் இருந்து வேடசந்தூர், லந்தக்கோட்டை, ஆர்.வெள்ளோடு, மணப்பாறை, வீரப்பூர், கோவை, அரவக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்தும், திருச்சி, வேடசந்தூர் ஆகிய ஊர்களுக்கு தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1986ல் குஜிலியம்பாறையில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த 1996-2001 கால கட்டத்தில், பஸ்நிலையம் முழுவதும் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது.

இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பஸ்நிலையத்திற்குள் செல்லாமல், வெளியில் சாலையி நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். இதனால், பொதுமக்களும் பஸ்நிலையத்திற்குள் வராமல், வெளியில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். ரூ.பல லட்சத்தில் கட்டப்பட்ட பஸ்நிலையம் காட்சிப் பொருளாக உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தும் குடிமகன்கள் இரவு, பகல் பராமல் பஸ்நிலையத்தை திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், போதை ஏறியவுடன் தகராறு செய்து ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.

எனவே, குஜிலியம்பாறை பஸ்நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுத்து, குடிமகன்களின் அட்டகாசத்தை தடுக்க, பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kujiliampara ,
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்