×

தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தேர்தல் திமுக 4 மண்டலத்தில் வெற்றி: சுயேச்சை ஒரு மண்டலத்தை பிடித்தது

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதில்,  தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. மாநகராட்சியின் 70 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது. தாம்பரம் மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 70 மாமன்ற உறுப்பினர்களும் கடந்த 2ம் தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் துணை மேயராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.காமராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து,  தாம்பரம் மாநகராட்சியின் 1வது மண்டலக் குழு தலைவர் வேட்பாளராக வெ.கருணாநிதி, 2வது மண்டலக் குழு தலைவர் வேட்பாளராக இ.ஜோசப் அண்ணாதுரை, 3வது மண்டலக் குழு தலைவர் வேட்பாளராக மகாலஷ்மி கருணாகரன், 4வது மண்டலக் குழு தலைவர் வேட்பாளராக டி.காமராஜ், 5வது மண்டலக் குழு தலைவர் வேட்பாளராக எஸ்.இந்திரன் ஆகியோரை திமுக தலைமை அறிவித்தது. இதனை தொடர்ந்து,  நேற்று 30ம் தேதி தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு மண்டலமாக தனித்தனியாக நடைபெற்றது.இதில்,  தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவராக வே.கருணாநிதி, 2வது மண்டல குழு தலைவராக இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3வது மண்டல குழு தலைவர் வேட்பாளர் மகாலஷ்மி கருணாகரனுக்கு போட்டியாக, தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர் ஜெயபிரதீப் சந்திரன் போட்டியிட்டார். இதில் இரு தரப்பினரும் தலா 7 வாக்குகள் பெற்றிருந்தனர். இதனால்,  குலுக்கல் முறையில் ஜெயபிரதீப் சந்திரன் வெற்றி பெற்றார்.

பின்னர்,  4வது மண்டல குழு தலைவராக டி.காமராஜ், 5வது மண்டல குழு தலைவராக எஸ்.இந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து திமுகவினர்    பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து நியமன குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் கணக்கு குழுவில் 6 பேர், பொது சுகாதார குழுவில் 6 பேர், கல்வி குழுவில் 6 பேர், வரிவிதிப்பு மற்றும் நிதி குழுவில் 6 பேர், நகரமைப்பு குழுவில் 6 பேர், பணிகள் குழுவில் 6 பேர், நியமன குழுவில் 6 பேர் என மொத்தம் 36 நியமன குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அந்தந்த குழுவில் யார் தலைவர் என்ற மறைமுக தேர்தல் இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tags : Tambaram Corporation Zonal Committee Chairman Election ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி