×

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா அடிப்படை கல்வியோடு நுண் திறனையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

நாசரேத், மார்ச் 24: அடிப்படை கல்வியோடு நுண் திறனையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டுமென நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசினார்.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் எஸ்.டி.கே.ராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை வரவேற்று கல்லூரி செயல்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். துறை தலைவர்கள், மாணவ- மாணவிகளை அறிமுகம் செய்தனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 424 பேர் பட்டங்களை பெற்றனர். முன்னதாக பல்கலைக்கழக  தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும்  வழங்கப்பட்டன. துணைவேந்தர் பிச்சுமணி பேசுகையில், அடிப்படை கல்வியோடு இதர திறமையை குறிப்பாக நுண் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டுமென மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் முன்னாள் எம்பி ஏ.டி.கே.ஜெயசீலன், ஜெபச்சந்திரன் மற்றும் பெற்றோர், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்.டி.கே.ராஜன், முதல்வர் அருள்ராஜ், துணை முதல்வர் பெரியநாயகம்ஜெயராஜ், நிதி காப்பாளர் குளோரியம் அருள்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nazareth Margoshis College ,Graduation Ceremony ,University ,Vice Chancellor ,
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா