×

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா குஜிலியம்பாறை

நத்தம், மார்ச் 23: நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ேகாயிலில்  மாசி பெருந்திருவிழா கடந்த மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில்  பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை துவக்கினர். தொடர்ந்து  வந்த வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற  வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்தது. பக்தர்கள் தினமும் பால், தேன்,  சந்தனம் ஆகியவற்றை குடங்களில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.  தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து  காணிக்கை செலுத்தப்பட்டது. பின்னர் அரண்மனை பொங்கல், காவடி வகையறாக்கள்  எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று  அதிகாலையிலிருந்து பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல்,  மாறுவேடம் அணிந்து வருதல், பறவை காவடி எடுத்தல், மாவிளக்கு- பொங்கல்  வைத்தல், குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டுதல் போன்ற  நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

பூக்குழி தளத்தில் காய்ந்த வேம்பு விறகு  கட்டைகளையும், உப்பு மிளகு பொட்டலங்களையும் காணிக்கையாக செலுத்தி  வழிபட்டனர். நேற்று காலை காந்தி நகர் மக்களால் கழுகு மரம் ஊன்றப் பட்டது.  பின்னர் காமராஜ் நகர் மக்களால் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.  தொடர்ந்து பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் பக்தர்கள் ஒருவர் பின்  ஒருவராக இறங்கினர். இதில் சிறியவர் முதல் முதியவர்கள் வரையிலும்,  கைக்குழந்தைகளுடன் பெண்களும் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை  தொடங்கி இரவு வரையில் பூக்குழியில் இறங்கினர். தொடர்ந்து இரவு  கோயிலிலிருந்து கம்பம் அம்மன் குளம் போய் சேர்க்கப்பட்டது.

இதில் நத்தம்  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று புதன் கிழமை  காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு  அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி  நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து கோயிலை சென்றடையும்.  ஏற்பாடுகளை  கோயில் செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி மற்றும் பூசாரி  வகையறாவினர், விழா குழுவினர் செய்திருந்தனர். பொது சுகாதார பணிகள்,  குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா  தலைமையில் செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் செல்வி மேரி  மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம்  போலீசார் செய்திருந்தனர்.

Tags : Natham Mariamman Temple Masi Festival Kujiliampara ,
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...