×

தண்ணீர் வளத்தை பெருக்க மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுறுத்தல்

மதுரை, மார்ச் 23: உலக தண்ணீர் வளத்தை பெருக்க அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுறுத்தினார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நேற்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் தண்ணீர் ஜீவாதாரமாக உள்ளது. அந்தவகையில், சுத்தமான தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுப்புற மேம்பாடு, சுகாதாரமான தண்ணீர், பருவநிலை மாற்றம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்ஒரு பகுதியாக சுற்றுப்புற மேம்பாடு மற்றும் சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது. குறிப்பாக, மலைவேம்பு, பாதாம், மந்தாரை உள்ளிட்ட பயன்தரும் மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டன. சுற்றுப்புறத்தை பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தை பாதுகாத்திடவும், மேம்படுத்தவும் முடியும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும், இதன்மூலம் தண்ணீர் வளத்தை பெருக்கவும், தானாக முன்வந்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்திட வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அபிதாஹனீப், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் ஹரிபாஸ்கர், துரைக்கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anish Shekhar ,
× RELATED ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!