×

அருந்ததியர்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர்,மார்ச்19: பல்லடம் வட்டம் சாமளாபுரத்தில் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அருந்ததியர் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அவர்களை காலி செய்ய நீர்வளத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்தும், அந்த பகுதியிலேயே அருந்ததிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பல்லடம் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கி பேசினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணை பொதுச்செயலாளர் சிவஞானம், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன், சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தமிழரசன், நாதன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாமளாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் அருந்ததியர் மக்களை வருகிற 31-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 10 இடங்களில் முதன்மை இடமாக உள்ள சாமளாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இருக்கிறோம் என கலெக்டர் தெரிவித்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்தோம். சாமளாபுரம் பகுதியில் கடந்த 100 ஆண்டு காலத்தில் குளத்து நீர் எந்த வீடுகளுக்குள்ளும் புகவில்லை. அங்கு எந்த பாதிப்பும் இல்லை. இதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும். வருகிற 31ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் இதுவரை ஏற்படவில்லை என்பதால், அங்கேயே அருந்ததிய மக்கள் வசிக்க அனுமதி வழங்க வேண்டும். நல்ல முடிவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.

Tags : Collector ,Office ,Arundhati ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...