×

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஊட்டி, மார்ச் 17: தமிழக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மை குழுவினை மறு கட்டமைப்பு செய்து செயல்படுத்துதல் சார்ந்து பள்ளி அளவில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி குறுவள மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, மைய ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியை அமீலியா தலைமை வகித்து பயிற்சினை துவக்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் உமாநாத், கவுன்சிலர்கள் மல்லிகா, கணேசன் முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கு மாவட்ட கருத்தாளரும் குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான நஞ்சுண்டன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் செல்வம் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

இதில், பயிற்சியின் நோக்கங்கள், முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு, குழந்தைகள் உரிமை, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, மேலாண்மை குழு அமைப்பு, பள்ளி மேம்பாட்டு திட்டம் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திட்டம் சார்ந்து அரசு அறிமுகம் செய்யவுள்ள புதிய செயலி குறித்தும் விரிவாக கூறப்பட்டது. இப்பயிற்சிக்கு கோத்தகிரி, குண்டாடா, ஒரசோலை, கட்டபெட்டு, காத்துகுளி, கன்னேரிமுக்கு, கேர்பெட்டா, திம்பட்டி உள்ளிட்ட 11 பள்ளிகளில் இருந்து 44 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பயிற்சி நிகழ்வுகள் அனைத்தையும் ஆசிரியர் பயிற்றுநர் அருண்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். இதேபோல் கோத்தகிரி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட நெடுகுளா, ஈளாடா, கீழ் கோத்தகிரி, அரவேனு ஆகிய குறுவள மையங்களிலும் இது சார்ந்த பயிற்சி ஆசிரியர் பயிற்றுநர்கள் அருண்குமார், சத்யா, ராஜூ, கங்கா பரமேஸ்வரி மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றன.

Tags : Kotagiri Government ,High ,School ,
× RELATED கோத்தகிரி அரசு மருத்துவமனையில்...