×

நூற்றுக்கணக்கான நூல்கள் அறுந்துவிடுகிறது கோடை வெயில் தாக்கத்தால் விசைத்தறி தொழில் மந்தம் தொழிலாளர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் சிக்கல்

சோமனூர், மார்ச் 12:  கூலி உயர்வு போராட்டத்திற்கு பிறகு கடந்த ஒரு வாரமாக விசைத்தறி தொழில் இயங்கி வரும் நிலையில் தற்போது கடுமையான கோடை வெயில் தாக்கத்தினால் விசைத்தறி தொழில் நடத்த முடியாமல் மந்தநிலை நிலவுகிறது.  கடந்த 2 மாதகாலமாக கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தற்போது, கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விசைத்தறிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கடுமையான வெயில் தாக்கம் நிலவுவதால் விசைத்தறிகள் நீண்ட நாட்களாக இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறிகள் பாவு நூல் அறுந்து விடுகிறது. கடுமையான வெப்பம் விசைத்தறி பாவு நூல்களில் ஊடுருவி ஓடுவதால் விசைத்தறியில் நூல் அறுந்து விடுகிறது.  10 தறி இயக்கக்கூடிய ஒரு தொழிலாளி, 5 தறி கூட இயக்க முடியாத சூழ்நிலையில்  தத்தளிக்கின்றார். வெயில் தாகத்தினால் வெப்பம் நூல்களில் பல மீட்டர் கணக்கில் ஊடுருவி விடுவதால், பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் அதிக அளவில் இழைகள் அழிந்துவிடுகிறது.

சாதாரணமாக, ஒரு விசைத்தறியில்  2 ஆயிரம் நூல்களிலிருந்து 5 ஆயிரம் நூல்களுடன்  விசைத்தறி இயங்கும் போது ஒரு நூல் அறுந்து விட்டாலும் கூட விசைத்தறி இயங்காது. ஆனால், தற்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான நூல்கள் அறுந்துவிடுகிறது. அவற்றை சரிசெய்து இயக்கும்போது மற்ற இயங்கக்கூடிய தறிகளிலும் அடுத்தடுத்து நூல்கள் அறுந்து விடுகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளி வேதனை அடைகிறார். விசைத்தறி தொழிலாளிக்கு எப்போதுமே உற்பத்தி ஆகக்கூடிய மீட்டர் அடிப்படையில் சம்பளம் வழங்குவதால், துணி உற்பத்தி ஆகாமல் விசைத்தறியாளர்கள் மிகுந்த வேதனை அடைகிறார்.

சாதாரணமாக ஒரு விசைத்தறியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு 50 மீட்டர் துணி வரை உற்பத்தி ஆகக்கூடிய நிலையில் தற்போதைய வெயில் தாக்கத்தால் 20 மீட்டர் துணி கூட உற்பத்தியாகாமல் தவிக்கின்றனர். இதனால், 600 ரூபாய் சம்பளம் பெறக்கூடியவர் ரூபாய் 300 கூட பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விசைத்தறி தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. துணி உற்பத்தி இல்லாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கூலி உயர்வு கேட்டு போராடி வந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும் விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் இதுபோன்ற சூழ்நிலை நிலவும் என்றாளும், கடந்த 2 மாதங்களாக விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாவின் உறுதித் தன்மை இழந்து அதிக அளவில் நூல்கள் அழிந்து விடுவதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவி அசத்தல்