×

காரியாபட்டி அருகே சர்ச்சை அரசு பள்ளி மாணவர்களை எஸ்ஐ அடித்தாரா?: பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

காரியாபட்டி, மார்ச் 10: காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து போலீசார், மாணவர்களை அடித்ததாக புகார் எழுந்தது. புகார் சம்பந்தமாக கல்வித்துறை சார்பில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் தான் பிரச்னைக்கு காரணமாக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனது டூவீலர் சாவி காணாமல் போனது குறித்து தலைமை ஆசிரியை விமலா, ஆவியூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் பள்ளிக்கு வந்த எஸ்ஐ வீரணன், சாவியை பற்றி மாணவர்களிடம் விசாரித்துள்ளார். மேலும் மாணவர்களிடம் ‘‘படிக்கவும் மறுக்கிறீர்கள், ஒழுக்கங்களை பற்றிக் கூறினாலும் கேட்க மறுக்கிறீர்கள்’’ என கண்டித்து விட்டு திரும்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில் ‘‘தலைமையாசிரியை கொடுத்த புகாரின்பேரில், பள்ளிக்கு வந்த எஸ்ஐ, சாவியை எடுத்தீர்களா என விசாரித்து சத்தம் போட்டு அடித்தார்’’ என கூறினர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, ‘‘எஸ்ஐ மாணவர்களை அடித்தார் என புகார் எழுந்தது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியர் தான் பிரச்னைக்கு காரணம் எனத்தெரிகிறது. இதன்பேரில் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை தருவார்கள். மேலும், எஸ்பி அலுவலகத்தில் இருந்தும் விசாரித்து அறிக்கை ஒன்று தருவார்கள். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

காரியாபட்டி இன்ஸ்பெக்டர் முக்கண் கூறுகையில், ‘‘பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் விசாரித்தோம். எஸ்ஐ தலைமையாசிரியரின் புகாரின்படி பள்ளிக்கு சென்றுள்ளார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சத்தம் போட்டுள்ளார். விசாரணையின் முடிவில் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து, அதன்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Kariyapatti ,SI ,
× RELATED காரியாபட்டி அரசு மருத்துவமனையில்...