×

உக்ரைன் போரில் உயிர் தப்பி வீடு திரும்பிய ஊரப்பாக்கம் மருத்துவ மாணவி: நலம் விசாரித்த திமுக ஊராட்சி தலைவர்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சி நேதாஜி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (49). எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாகிராபானு (47).  நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஷாஜிதாபானு (19) என்ற மகனும் 16 வயதில் மகனும் உள்ளனர். உக்ரைன் கார்கிவ்வில் நேஷனல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு மருத்துவ மாணவி. மகன் ஊரப்பாக்கம் தனியார்  பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார்.

உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து போர் நடத்துகிறது. இதில், உயிர் தப்பிய மாணவி ஷாதிதாபானு, தமிழகம் திரும்பினார். இதையறிந்த திமுக ஊராட்சி தலைவர் பவானி கார்த்தி நேற்று மாலை, மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது, மாணவி ஷாஜிதாபானு கூறுகையில், கடந்த 24ம் தேதி உக்ரைனில் போர் தொடங்கியது. இதில், இந்தியாவை சேர்ந்த 200 மாணவர்களும், உக்ரைனை சேர்ந்த 400 பேரும் எங்களுடன் தங்கினர். நாங்கள் தங்கிய இடத்துக்கு 100 மீட்டர் இடைவெளியில் ரஷ்யா குண்டு மழை பொழிந்தது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற உயிர் பயத்திலேயே நாங்கள் இருந்தோம். மேலும், 24 முதல் 26ம் தேதி வரை நாங்கள் உண்ண உணவு, தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக பாதித்தோம். அப்போது, தமிழகத்தை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர், எங்களுக்கு உதவி கரம் நீட்டினர்.

தொடாந்து, கடந்த 1ம் தேதி இந்தியா திரும்புவதற்காக அனைவரும் புறப்பட்டு, 2ம் தேதி போலந்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த மத்திய குழுவினர், டெல்லிக்கு 4ம் தேதி அழைத்து வந்தனர். அங்கு, தங்கும் வசதி உணவு ஏற்பாடு மற்றும் விமான சேவை வசதியை மத்திய அரசும், தமிழக அரசும் ஏற்பாடு செய்தது. இதற்காக தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் படிக்கும் 6 ஆண்டு மருத்துவப் படிப்பில், 3 ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது போர் நடந்ததால் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து படிக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து, மாணவியிடம் நலம் விசாரித்த ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி, மாணவிக்கு ஆறுதல் கூறிய பின்னர் ₹5000 நிதியுதவி அளித்தார்.

Tags : Ukraine ,Vimuka ,Prouru ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி