×

சேதமடைந்து காணப்படுகிறது சாத்தங்குடி சாலையை சீரமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

சாயல்குடி, மார்ச் 8: கடலாடி அருகே சாத்தங்குடி, வெள்ளாங்குளம் கிராமத்திற்கு தார்ச்சாலை மற்றும் தெருச்சாலை வசதி வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம், மீனங்குடி பஞ்சாயத்தில் சாத்தங்குடி, வெள்ளாங்குளம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தினர் விவசாயம், நூறு நாள் வேலை உள்ளிட்டகூலி வேலைகளை செய்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நடுநிலை கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை படிப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலாடிக்கு சென்று வருகின்றனர். கிராமமக்கள் அலுவலகம் சான்றுகள், உதவிகள், மருத்துவமனை, காய்கறி, பலசரக்கு சாமான்கள் முதல் அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் கடலாடி சென்று வருகின்றனர்.

கடலாடியிலிருந்து மீனங்குடி, சாத்தங்குடி முக்குரோடு வழித்தடத்தில் மேலச்செல்வனூருக்கு ஒரே ஒரு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பஸ் ஏறி செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள விலக்குரோட்டிற்கு நடந்து
வரும் நிலை உள்ளது. ஆனால் சாத்தங்குடி பொதுமடம் முதல் விலக்கு ரோடு வரையிலான சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இருபுறம் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் ஆட்டோக்களில் கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சாத்தங்குடி வெள்ளாங்குளம் நேதாஜி நற்பணி மன்றத்தினர் கூறும்போது, சாத்தங்குடி பொதுமடத்திலிருந்து மீனங்குடி-மேலச்செல்வனூர் சாலை சந்திப்பு உள்ள முக்குரோடு வரை உள்ள சாலை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குண்டும், குழியுமாக சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மாணவர்கள், முதியவர்கள் நடந்து கூட செல்லமுடியவில்லை. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியவில்லை. இறந்தவர் உடலை கூட மயானத்திற்கு கொண்டுச் செல்லமுடியவில்லை.

இதனை போன்று பல ஆண்டுகளாக தெருக்களில் போதிய தெருச்சாலை வசதி கிடையாது. இதனால்  திருவிழா, திருமணம் போன்ற விஷேசங்கள் மற்றும் மழை காலங்களில் பெரும் துயரை சந்திக்கும் நிலை தொடந்து வருகிறது. எனவே  மீனங்குடி-மேலச்செல்வனூர் சாலை சந்திப்பு முக்குரோடு முதல் சாத்தங்குடி மடம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். தெருக்களில் கழிவு நீர் கால்வாய் வசதியு
டன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sathangudi ,
× RELATED திருமங்கலம் அருகே 17ம் நூற்றாண்டின் நடுகல் வீரன் சிற்பம்