×

காயல்பட்டினம் நகராட்சி தலைவராக முத்துமுஹம்மது துணைத்தலைவராக சுல்தான்லெப்பை தேர்வு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வாழ்த்து

ஆறுமுகநேரி,மார்ச்5: காயல்பட்டினம் நகராட்சி தலைவராக முத்துமுஹம்மது, துணைத்தலைவராக சுல்தான்லெப்பை ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பதவியேற்பு விழாவில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பேசினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைவராக திமுகவை சேர்ந்த முத்து முஹம்மது மற்றும் துணைத்தலைவராக சுல்தான் லெப்பை ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முஹியத்தீன் தம்பி தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையாளர் சுகந்தி வரவேற்புரை ஆற்றினார். கவுன்சிலர்கள் சுகு, அன்வர், திமுக மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், முஸ்லிம் ஐக்கிய பேரவை துணை செயலாளர் நவாஸ், இ.யூ. முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் அமானுல்லாஹ் ஆகியோர் பேசினர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: காயல்பட்டினம் அலியார் தெருவில் உள்ள துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரூ.22லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து விரைவில் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப சுகாதாரநிலையம் கட்டுவதற்காக எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை விடுத்தபோது அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்து அப்பணியினை நிறைவேற்றியுள்ளார். அதனுடன் தற்போது ரூ.25லட்சம் மதிப்பில் அங்கு சுற்றுசுவர் கட்டுவதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளார். விரைவில் சாலை வசதி செய்துக்கொடுக்கப்படும். அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

  மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காயல்பட்டினம் நகர பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தூத்துக்குடி போன்ற பெருநகரில் ஆழமான பள்ளம் அமைத்து மழைநீர் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது போன்று காயல்பட்டினத்திலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான திட்டம் தயார் செய்து ஆய்வு மேற்கொண்டு வழங்குங்கள். விரைவில் அதற்குத்தேவையான நிதியினை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி பெற்றுத்தரப்படும்.

குடிநீர் பிரச்னையை தீர்க்க பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினார். விழாவில் நகராட்சி தலைவர் முத்துமுஹம்மது, துணைத்தலைவர் சுல்தான் லெப்பை ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முஸ்லிம் ஐக்கிய பேரவை துணைத்தலைவர் பாதுல் அஸ்ஹப் நன்றி கூறினார். திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்காதர், ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் சம்சுதீன், பொருளாளர் கனிமுகம்மது உமர், மாவட்ட பஞ். துணைத்தலைவர் செல்வகுமார், அரசு வக்கீல் பாரிகண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Anitharadhakrishnan ,Sultan Lep ,Muthumuhammed ,Deputy Mayor of ,Kayalpattinam ,
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...